அறிகுறியுடன் கூடிய கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் 50 சதவீதம் சிறப்பாகச் செயல்படுகிறது: லான்செட் ஆய்வில் தகவல்..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தொற்றுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசியின் 2 டோஸ்களும், அறிகுறியுடன் கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக 50 சதவீதம் சிறப்பாகச் செயல்படுகிறது என்று புகழ்பெற்ற மருத்துவ இதழான லான்செட் மருத்து இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தி லான்செட் இதழில், கோவாக்சின் குறித்து சமீபத்திய ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, கோவாக்சின் (பிபிவி152) அறிகுறியுடன் கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக 77.8 சதவீதம் சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்புரீதியி்ல் எந்தவிதமான குறைபாடும் இல்லை எனத் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவிய காலத்தில் கடந்த ஏப்ரல் 15 முதல் மே 15ம் தேதிவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2,714 ஊழியர்களிடம் பரிசோதிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டன.

ஆய்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் அறிகுறியுடன் கூடிய கொரோனா தொற்றும், ஆர்-டி பிசிஆர் மூலம் தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டவர்கள்.


கோவாக்சின் தடுப்பூசி உள்நாட்டில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவை சேர்ந்து தயாரித்தன.

இரு டோஸ் கொண்டவையாக இருக்கும் கோவாக்சின் தடுப்பூசி, முதல் டோஸுக்கும், 2-வது டோஸுக்கும் இடையே 28 நாட்கள் இடைவெளியுடன்செலுத்த வேண்டும்.


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிந் கூடுதல் பேராசிரியர் மணிஷ் சோனேஜா கூறுகையில் “கொரோனாவுக்கு எதிராக களத்தில் எவ்வாறு கோவாக்சின் செயல்படுகிறது, அதிலும் இந்தியச் சூழல்களுக்கு ஏற்ப எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான முழுமையான தோற்றத்தை எங்கள் ஆய்வு வழங்குகிறது.


எங்கள் ஆய்வில் தடுப்பூசி செலுத்தியபின் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தி குறித்து தெரிவிக்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் முக்கியமான கருவியாக இருப்பது தடுப்பூசி திட்டத்தை வேகமாகச் செயல்படுத்துவதும், பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக விலகல் போன்றவற்றை தொடர்ந்து பின்பற்றுவதாகும்” எனத் தெரிவித்தார்.


டெல்லி எய்ம்ஸ் தடுப்பூசி மையத்தில் கடந்த ஜனவரி 16 முதல் 23 ஆயிரம் ஊழியர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆய்வு நடத்தப்பட்ட 2,714 ஊழியர்களில் 1,617 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், 1097 பேருக்கு நெகட்டிவ் இருந்தது.


இந்த ஆய்வின் முடிவில்,அறிகுறியுடன் கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் இரு டோஸ் செலுத்தியபின் 14 நாட்களுக்குப்பின் 50 சதவீதம் சிறப்பாகச் செயல்படுகிறது தெரியவந்துள்ளது.

இரு தடுப்பூசிகளையும் செலுத்தியபின் உடலில் தடுப்பூசி 7 வாரங்களுக்கு அதன் செயல்பாடு நிலையாக இருக்கிறது என ஆய்வில் தெரியவந்தது.


எய்ம்ஸ் மருத்துவமனையின் மருந்துத்துறை துணைப் பேராசிரியர் பரூல் கொந்தன் கூறுகையில் “முந்தைய ஆய்வில் கிடைத்த முடிவுகளின்படி, கோவாக்சின் இரு டோஸ்கள் செலுத்தியபின் அதிகபட்ச பாதுகாப்பு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது.

டெல்டா மற்றும் பல்வேறு உருமாற்ற வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் செயல்பாடு குறித்து தெளிவாகப் புரிந்து கொள்ள கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது.

குறிப்பாக தீவிரத் தொற்று, மருத்துவமனையில் அனுமதி, உயிரிழப்பு ஆகியவற்றை எவ்வாறு கோவாக்சின் தடுக்கிறது, குறைக்கிறது என்பதை அறியவும் ஆய்வுகள் கூடுதலாக செய்ய வேண்டும்.


ஆய்வில் மருத்துவமனை ஊழியர்கள் மட்டும் பங்கேற்றனர். மக்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஏனென்றால் மக்களைவிட மருத்துவமனை ஊழியர்கள்தான் எளிதாக தொற்றில் பாதிக்கப்பட வாய்ப்புண்டு என்பதால் அவர்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

அதேசமயம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், தீவிரத் தொற்று, உயிரிழப்பு போன்றவற்றுக்கு எதிராக இந்த ஆய்வு நடத்தப்படவில்லை.
இவ்வாறு பரூல் தெரிவித்தார்.