கொரோனா நோயால் பாதித்த லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை..!

சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா நோயால் அனுமதிக்கப்பட்டிருந்த லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் குன்னம் தயாகர் (46). இவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், அவர் 3 மாதங்களாக வலது காலில் ரத்த நாளம் பிரச்னையால் அவதியடைந்து வந்தார்.

இதற்காக சமீபத்தில்,  திருப்பதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு குன்னம் தயாகருக்கு, அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இரு நாட்களுக்கு முன்பு அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  அங்கு அந்த மருத்துவமனையின் மூன்றாவது டவர் பகுதியில் உள் நோயளியாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் குன்னம் தயாகர், இன்று காலை அந்த  வார்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் லூங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மேலும் இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.