கொரோனா பெண் நோயாளி கொலை, பிரேத அறிக்கையில் செய்த குளறுபடி கூடவே சுற்றி திரிந்த கொலையாளி

சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா பெண் நோயாளி கொலை வழக்கில் பிரேத அறிக்கையில் நடந்த குளறுப்படியால் கொலையாளி கூடவே சுற்றி திரிந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
 

சென்னை, மேற்கு தாம்பரம், திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் மவுலி. இவர் தனியார் கல்லூரி துணை பேராசிரியர் ஆவார். இவரின் மனைவி சுமிதா( 41). இவர், மே மாதம் 21ம் தேதி அன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாம் டவர், 363ம் வார்டில், உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார். 23ம் தேதி அன்று சுமிதா காணவில்லை. இதையடுத்து 31ம் தேதி அன்று மவுலி, பூக்கடை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுமிதாவை தேடி வந்தனர். கடந்த 8ம் தேதி அன்று அதே மருத்துவமனை மூன்றாம் டவரில், 8வது மாடியில், மின் பகிர்மான அறையில், சுமிதா அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார், சுமிதா உடலை கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் 7 நாட்கள் கழித்து சுமிதா கொல்லப்பட்டார் என தெரிந்து அதே மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் திருவொற்றியூரை சேர்ந்த ரதிதேவி (41) என்பவர் கைதானார்.

சுமிதாவின் நகை, பணம் மற்றும் செல்போனை திருடி மாட்டிக் கொண்ட ரதிதேவி, சுமிதாவிடம் காட்டி கொடுத்தால் என் வேலை போய்விடும் என கெஞ்சினார். பின்னர், 8வது மாடியில் திருடிய பொருட்களை வைத்திருப்பதாக கூறி சுமிதாவை வீல் சேரில் அழைத்து சென்ற ரதிதேவி அங்கு, கீழே கிடந்த வயரை எடுத்து கழுத்தை இறுக்கி கொன்றார் என விசாரணையில் தெரிய வந்தது. ஆரம்பத்தில் சுமிதா சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இதனால் சுமிதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு வரவில்லை. ஆனால், சுமிதா செல்போனும் காணவில்லை என மவுலி, போலீசில் தெரிவித்திருந்தார். அதை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தபடி இருந்தனர். அது தெரியாமல் ரதிதேவி, சுமிதாவின் செல்போனில், வேறொரு சிம் கார்டை போட்ட போது தான் ரதிதேவி போலீசில் சிக்கினார். பின்னர் சுமிதா கொல்லப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது சுமிதாவின் செல்போனில் சிம்மை மாற்றும் போது ரதிதேவி சிக்கினார். இல்லையென்றால் ரதிதேவி மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. காரணம், அவர் வேலைக்கு விடுப்பு எடுக்கவில்லை. நாங்கள் மருத்துவமனையில் விசாரணை நடத்தும் போதெல்லாம் ரதிதேவி உடன் இருந்தார். காரணம் மருத்துவமனை நிர்வாகம் சுமிதா நோய் தொற்றால் இறந்ததாக பிரேத அறிக்கையில் செய்த குளறுப்படி தான். நாங்கள் இந்த விசாரணையில் கொலையாளியை பிடிக்க 7 நாட்கள் ஆனது என்றார்.