பங்குச்சந்தையில் தொடரும் பதற்றம்! சென்செக்ஸ், நிப்டி தொடர் சரிவு: ஐடி பங்குகளுக்கு அடி

மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தை தொடர்ந்து 4வது வர்த்தக தினமான இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக வெளியானதகவல், பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்துவதைக் குறைக்காது என்ற தகவல் சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால், இந்தியச் சந்தையில் இருந்து திடீரென அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது அதிகரித்ததால் கடந்த இரு நாட்களாக சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஊசலமாட்டமான மனநிலையும், பதற்றமான போக்கும் காணப்பட்டு சரிந்தது.

இது தவிர இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்ளைக் குழுக் கூட்டம் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ ரேட் 50 புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்பிஐ அறிவிப்பை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் இருப்பதால் சந்தையில் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் காலை வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பே மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகக் குறியீடு குறைந்தது. வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தையில் 36 புள்ளிகள் சரிந்து, 62,589 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 14 புள்ளிகள் குறைந்து, 18,627 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில், 12 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் 18 நிறுவனப் பங்குகள் சரிவிலும் உள்ளன.

லார்சன் அன்ட் டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், இன்போசிஸ், பார்திஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் விலை ஏற்றத்தில் உள்ளன.

நிப்டியில் ஹெச்சிஎல் டெக், விப்ரோ, என்டிபிசி, டிசிஎஸ், டெக்மகிந்திரா, கோடக் வங்கி ஆகிய பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளது. ஓஎன்ஜிசி பங்கு மதிப்பு 0.7 சதவீதம் குறைந்துள்ளது.

ஆட்டோமொபைல் துறைப் பங்குகள், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் தலா 0.5 சதவீதம் சரிந்தன. பொதுத்துறை வங்கிப்பங்குகள், எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் மதிப்பு 0.6 சதவீதம் உயர்ந்துள்ளது.