காங்கிரஸ் தலைவர் தேர்தல்: கடைசி நேர மாற்றம்! மல்லிகார்ஜுன கார்கே போட்டி: திக்விஜய் சிங் இல்லை?

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் திக்விஜய் சிங் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை, மாறாக மல்லிகார்ஜூன கார்கே போட்டியிட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இன்றுடன் வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசித் தேதியாகும். இதுவரை எந்த வேட்பாளரும் வேட்புமனுத் தாக்கல்செய்யவில்லை.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடாத நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பெயர் பேசப்பட்டது.

ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் நேர்ந்த அரசியல்குழப்பம், எம்எல்ஏக்கள் போராட்டத்தால் கெலாட் பெயர் கைவிடப்பட்டது.

இதையடுத்து, ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றிருந்த மூத்த தலைவர் திக் விஜய் சிங் டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

இதனால், தலைவர் பதவிக்கு திக்விஜய் சிங் போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று காலை முதல், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட உள்ளார்.

இன்று வேட்புமனுவை கார்கே தாக்கல் செய்ய உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே மல்லிகார்ஜூன கார்கேயையும், கேசி வேணுகோபாலையும் இன்று காலை திக்விஜய் சிங் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு எதற்காக நடந்தது, என்ன ஆலோசிக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

ஆனால், திக் விஜய் சிங் நேற்று வேட்புமனுத் தாக்கலுக்கான ஆவணங்களைப் பெற்றுவிட்ட நிலையில், கார்கே வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக எழுந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா காந்தியின் ஆதரவுடன் மல்லிகார்ஜேன கார்கே போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

ஒருவருக்கு ஒரு பதவி என்ற திட்டம் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் பொருந்தும் என்பதால், கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டியதிருக்கும்.

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம்.

மாலையில்தான் எத்தனை பேர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் தெரியவரும்.