வேலைக்கு சென்று பக்ரைனில் தவிக்கும் 3 பெண்களை மீட்கக்கோரி போலீசில் புகார்; உணவு கொடுக்காமல் சித்ரவதை

பக்ரைன் நாட்டில், வீட்டு வேலைக்கு சென்று உணவும் இல்லாமல் சித்ரவதை செய்யும் எங்களை காப்பாற்றுங்கள் என வாட்சப்பில் அனுப்பிய வீடியோவை வைத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டன.

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, அருணாச்சலீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர்கள்  வேளாங்கன்னி (32), வள்ளி (36), வடிவுக்கரசி (38) ஆகிய 3 பெண்களும் கணவரை பிரிந்து வாழ்பவர்கள். வெளி நாட்டிற்கு சென்று வீட்டு வேலை செய்தால் சம்பளம் நிறைய வரும் குழந்தைகளை காப்பாற்ற உதவும் என கள்ளக்குறிச்சி டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் பாஸ்போர்ட், விசா எடுத்து பக்ரைன் நாட்டிற்கு சென்றனர். கடந்த பிப்ரவரி மாதம் சென்ற இவர்கள் அங்கு சரியான உணவு இல்லாமல் வீட்டின் உரிமையாளர்கள் சித்ரவதை செய்துள்ளனர். பக்ரைன் நாட்டில் உள்ள ஏஜென்சியிடம் இவர்கள் முறையிட்டதில் ரூ.2 லட்சம் கொடுத்தால் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து மூன்று பெண்களும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை  வாட்சப் மூலம் உறவினர்களுக்கு வீடியோ அனுப்பினர். இதையடுத்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷ்னரிடம் உறவினர்கள் 3 பெண்களை மீட்கக்கோரி புகார் கொடுத்துள்ளனர்.