காமென்வெல்த் விளையாட்டு: மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு ஹாட்ரிக் தங்கப் பதக்கம்

பிர்மிங்ஹாமில் நடந்து வரும் காமென்வெல் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தப் போட்டிகளில் இந்திய ஒரே நாளில் 3 தங்கப்பதக்கங்கள் உள்ளிட்ட 5 பதக்கங்களை வென்றது.

இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கப்பதக்கம் வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தார். சாக்சி மாலிக் முதல்முறையாக காமென்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஆடவருக்கான ப்ரீஸ்டைல் பிரிவில் 86 கிலோ எடைப் பிரிவில் தீபக் பூனியா தங்கம் வென்றார்.

57கிலோ எடைப் பிரிவில் அன்சு மாலிக் வெள்ளி வென்றார். 68 கிலோ எடைப் பிரிவில் திவ்யா காக்ரன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

3 தங்கப்பதக்கங்களை ஒரே நாளில் வென்றதையடுத்து, பதக்கப்பட்டியலில் இந்தியா 5வது இடத்துக்கு முன்னேறியது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான பஜ்ரங் பூனியா 65கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தார்.

கனடா வீராங்கனை அன்னா கோடினோ கோன்சாலஸை சாய்த்து சாக்‌ஷி மாலிக் முதல் முறையாகத் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதற்கு முன் காமென்வெல்த் போட்டியில் மாலிக் பங்கேற்றாலும், வெண்கலம், வெள்ளியோடுதான் வெளியேறினார்.

தங்கப்பதக்கத்தை இதுவரை கைப்பற்றவில்லை. முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான சாக்‌ஷி மாலிக், கடந்த 2018ம் ஆண்டு கோல்ட்கோஸ்டில் நடந்த காமென்வெல்த் போட்டியிலும் வெண்கலம் மட்டும வென்றார்.

ஆனால் இந்த முறை தங்கம் வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கி தங்கம் வென்றார்.

தீபக் பூனியா 86 கிலோ எடைப்பிரிவில் ப்ரீ ஸ்டைல் பிரிவில் களமிறங்கி இறுதிப் போட்டியில்நியூஸிலாந்து வீரர் மேத்யூவை ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அன்சு மாலிக், இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஐரனே சிமனோடிஸிடம் தோல்வி அடைந்து வெள்ளியோடு விடை பெற்றார்.

68 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற திவ்யா காக்ரன் நைஜீரியாவின் ஓபோருட்டோவிடம் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலம் வென்றார்.