சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறையாமல் இருந்து வருவதையடுத்து, சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.

மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த உயர் மட்ட அதிகாரிகள் அளவிலான கூட்டத்தில் நீண்ட ஆலோசனைக்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண், தேர்வு முடிவுகள் குறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் உரிய காலத்தில் முடிவுகளை வெளியிடும்.

பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாமல் இருந்து வருகிறது. இந்த சூழலில் மாணவர்களுக்கு 12ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை என்று பல மாநிலங்கள் தெரிவித்தன. அது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின் தேர்வுகளை நடத்தலாம் என சில மாநிலங்கள் மத்திய அரசுடன் சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தன. இதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் “ நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத சூழலில், அழுத்தமான மனநிலையில் இருக்கும் மாணவர்களை தேர்வுகளை எழுதக் கூறி கட்டாயப்படுத்த கூடாது என பிரதமர் மோடி தெரிவித்தார். அனைத்து தரப்பினரும இந்த நேரத்தில் மாணவர்கள் நலனையும், பெற்றோர், ஆசிரியர்கள் உணர்வுகளையும் உணர வேண்டும். அனைத்து தரப்பினருடனும் நடத்தப்பட்ட தீவிர ஆலோசனைக்குப் பின் இந்த ஆண்டு 12ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்வது என முடிவு செய்யப்டுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.