குஷியாகும் சீன மக்கள்: 3-வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி

சீனாவில் குறைந்து வரும் மக்கள் தொகை நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தையடுத்து, அந்நாட்டு மக்கள் 3-வது குழந்தை பெற்றுக் கொள்ள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, அதிபர் ஜி ஜின்பிங் விரைவில் அதிகார பூர்வமாக தனது அறிவிப்பை மக்களுக்கு வெளியிடுவார் எனத் தெரிகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் 2 குழந்தைகளுக்கு மேல் எந்த தம்பதியும் பெற்றுக் கொள்ள அனுமதியில்லை என்று கடும் சட்டம் அமலில் இருந்தது. அந்தக் கொள்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என்பதால் இப்போது தளர்த்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் சீனாவின் மக்கள் தொகை குறித்த புள்ளி விவரம் வெளியிடப்பட்டது. அதில், கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு வளர்ந்து 141 கோடியைத் தான் எட்டியுள்ளது. மேலும் நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 18.7 சதவீதம் அதிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது அல்ல, உற்பத்திப் பிரிவினர் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் சரியல்ல, தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் என்று பொருளதாார வல்லுநர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து 2 குழந்தை கொள்கையை சீனா தளர்த்தியுள்ளது.

ஏற்கெனவே கடந்த 30 ஆண்டுகளாக ஒரு குழந்தை முறையை சீனா தீவிரமாகக் கடைபிடித்ததால் 40 கோடி குழந்தைகள் பிறப்பது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் தொகை வளர்ச்சியும் மிகவும் சரிந்து விட்டதால், சீனா அரசு நீண்ட காலமாக கடைபிடித்து வந்த குடும்பக் கட்டுப்பாடு கொள்கையையும் நீக்க உள்ளது.

இதையடுத்து சீனாவில் உள்ள தம்பதி 3-வது குழந்தை பெற்றுக் கொள்ள அதிபர் ஜி ஜின்பிங் விரைவில் அதிகார பூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிகிறது. இதற்கான முடிவை அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்ட அரசியல் குழு எடுத்துள்ளதால் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

இது குறித்து அரசின் ஜின்குவா செய்தி நிறுவனம் கூறுகையில் “சீனாவில் உள்ள தம்பதிகள் 3-வது குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால் அதை அரசு ஆதரிக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள பெக்கிங் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் லியாங் ஜியான்ஹாங் கூறுகையில் “சீனாவில் குறைந்து வரும் மக்கள் தொகை நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. ஆதலால், குழந்தைப் பிறப்பை அதிகப்படுத்த 3வது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு 1.56 லட்சம் டாலர் வெகுமதி அறிவிக்க வேண்டும்.

இதே நிலை நீடித்தால் ஐநா கணித்த 2027ம் ஆண்டுக்கு முன்பாகவே சீனாவை மக்கள் தொகை வளர்ச்சியில் இந்தியா முந்திவிடும். 2019ம் ஆண்டு ஐ.நா. கணக்கீட்டின் படி 2027ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை 143 கோடியாகவும், இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடியாகவும் இருக்கும் எனக் கணக்கிட்டது அதை பொய்த்துப் போகும்” எனத் தெரிவித்தார்.