அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் குடும்பத்தாருக்கு தடை: பதிலடி தரத் தொடங்கியது சீனா

தைவானுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி அவரின் குடும்பத்தாருக்கு தடைவிதித்து சீனா உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவத்துறை அமைச்சகம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும், எந்தவிதமான குறிப்பிப்படாத தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

தைவானை தங்கள் நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. இதனால் தைவானுக்கு எந்த நாட்டைச் சேர்ந்த தலைவர்களும், பிரதிநிதிகளும் செல்வதையோ, அந்நாட்டின் சுயாட்சிபற்றியோ அல்லது சுதந்திரத்தைப் பற்றி பேசுவதை சீனா விரும்புவதில்லை.

ஆனால், தைவான் அரசோ தாங்கள் சுயாட்சி கொண்டவர்கள், சீனாவுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல என்று தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கபிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசியின் ஆசியப் பயணத்தில் தைவானுக்கு வரத்திட்டமிட்டார்.

ஆனால், நான்சி பெலோசி தைவான் செல்வதை விரும்பாத சீன அரசு அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

தைவானுக்கு நான்சி பெலோசி சென்றால் இருநாடுகளுக்கு இடையிலான உறவு மிக மோசமாகும் என்றும் நெருப்புடன் விளையாடுகிறது என்று சீனா அமெரிக்காவை எச்சரித்தது.

ஆனால், நான்சி பெலோசிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது தைவான் அரசு. தைவான் பயணத்தை முடித்துச்செல்லும்போது நான்சி பெலோசி கூறுகையில் “தைவானின் சுயாட்சி உரிமையை அமெரிக்கா அங்கீகரிக்கிறது.

தைவானுக்கு எந்த நாட்டுத் தலைவர்களும் வருவதை சீனா தடுக்கக்கூடாது. தைவானுக்குதேவையான உதவிகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்தது.

இது சீனாவின் ஆத்திரத்தையும், கோபத்தையும் தூண்டியது. சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரநேரில் அழைத்து கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் சீனா தெரிவித்தது.

அதுமட்டுமல்லாமல், தைவானின் கடற்பகுதிகள், தைவானைச் சுற்றி சீன போர்விமானங்கள் போர்பயிற்சியில்ஈடுபட்டு அச்சுறுத்தி வருகின்றன.

ஆனால், இதுபோன்ற மிரட்டல்களை கண்டு அஞ்சமாட்டோம் என்று தைவான் பதிலடி தந்துள்ளது. இந்நிலையில் அமெரி்க்க சபாநாயகர் நான்சி பெலோசி அவரின் குடும்பத்தார் சீனாவுக்குள் நுழைய சீன அரசு தடைவிதித்துள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “ நான்சி பெலோசியின் தைவான் பயணம் எங்களை கோபப்படவைக்கும் செயல்.

சீனாவின் இறையாண்மை,எல்லைப்புற ஒருமைப்பாட்டை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டுள்ளது. ஆதலால், நான்சிபெலோசி அவரின் குடும்பத்தாருக்கு உடனடியாக தடைவிதிக்கிறோம். என்ன தடை என்பதை கூறமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே தைவான் கடற்பகுதியைச் சுற்றி சீனாவின் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள, போர் பயிற்சியிலும் ஈடுபடுவதையும் நிறுத்தவில்லை.

இதனால், தைவானைச்சுற்றி போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.