மெக்கானிக் கடைக்கு வழிகேட்டு, லிப்ட் ஆபரேட்டரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, நகை பறிப்பு..!

சென்னை, பள்ளிக்கரணை பகுதியில் மெக்கானிக் கடைக்கு வழிகேட்டு, லிப்ட் ஆபரேட்டரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

சென்னை, குரோம்பேட்டை, பாத்திமா நகர், கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் அவினாஷ் (30).

இவர்,  அடையாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்து  வருகிறார்.  

வெள்ளிக்கிழமை  இரவு வேலை முடிந்து, அவினாஷ் தனது பைக்கில்  நன்மங்கலம்- குரோம்பேட்டை இணைப்பு சாலை வழியாக வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருந்தார்.
 
அப்போது , இரண்டு  மர்ம நபர்கள், அவரை வழிமறித்து நிறுத்தினர். அவர்கள், எங்கள் பைக்கில் பழுதாகிவிட்டது. இந்த பகுதியில் மெக்கானிக் கடை உள்ளதா என அவினாஷிடம் பேசினர்.

அதற்கு அவினாஷ், பதில் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென இரண்டு  மர்ம நபர்களும், தாங்கள்  மறைத்து வைத்திருந்த மிளகு பொடியை அவரின் கண்ணில் தூவினர்.

இதில் அவினாஷ் நிலைகுலைந்தது, கண் எரிகிறது என கத்திய நேரத்தில், அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர்.

இந்த  சம்பவம் குறித்து பள்ளிக்கரணை. போலீசார்  வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.