தீவிரமடையும் கொரோனா பரவல்…அதிகாரிகளுடன் முதல்வர் இன்று அவசர ஆலோசனை.. புதிய கட்டுப்பாடுகள் வெளியாகும்?

எடப்பாடி கே பழனிசாமி

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலகத்தில் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், முக்கிய துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து பஸ்களில் நின்று பயணிக்க கூடாது போன்று புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது.

ராஜீவ் ரஞ்சன்

இதனையடுத்து கொரோனா பரவல் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது தமிழகத்துக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது.

ஜெ.ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்திலிருந்து சென்னை வருகிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.