இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: காதலன் சிறையில் அடைப்பு..! குழந்தையும் கொடுத்து, திருமணத்திற்கு மறுப்பு

சென்னை, பூந்தமல்லி பகுதியில், குழந்தையும் கொடுத்து, திருமணத்திற்கும் மறுத்ததால், இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது தொடர்பாக, காதலன் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை, பூந்தமல்லி, கீழ்மாநகர்,சேஷாநகரைச் சேர்ந்தவர் ஜோ. கவுதம் (எ) ஆகாஷ் (22). இவர்  ஜவுளிக் கடை ஒன்றில் வேலை செய்து வந்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம்.

இந்த பெண் ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். மேலும் முதல் கணவர் மூலம் இந்த பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ஆகாஷ், அந்த பெண்ணிடம் தான் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியுள்ளார்.

இதை அந்த பெண் நம்பி, ஆகாஷூடன் பழகத் தொடங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட முறையற்ற உறவினால் அந்த பெண் கர்ப்பமானார்.

கடந்த மாதம் 21ம் தேதி அந்த பெண்ணுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர் ஆகாஷ், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு அந்த பெண், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இது குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் ஆகாஷ், அந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆகாஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.