மரம் விழுந்து பெண் காவலர் பலி: தேநீர் அருந்த சென்றிருந்தால், உயிர் தப்பித்து இருப்பார்..!

தலைமை செயலகத்தில், பழமை வாய்ந்த தூங்கு மூஞ்சி மரம் வேரோடு சாய்ந்ததில் பெண் காவலர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அவர், தேநீர் அருந்த சென்றிருந்தால், உயிர் தப்பித்து இருப்பார் என அங்குள்ள காவலர்கள் சிலர் உருக்கமாக தெரிவித்தனர்.

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை தொடங்கி தென் மாவட்டங்களில் அதிகளவில், கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும், தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடப்பட்டன. மேலும், காற்றி வேகமும், இடியும், மின்னலுமாய் மழை பெய்து வருகிறது.


இந்த நிலையில், தலைமை செயலகத்தில், இன்று காலை முதல்வர் தனிப்பிரிவு அருகே முத்தியால் பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர் கவிதா (40). ராயபுரம் போக்குவரத்து காவல் நிலைய காவலர் முருகன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

காலையில் இருந்தே மழை பெய்துக்கொண்டிருந்தது பாதுகாப்பு பணியில் இருந்த இடத்தில் மிகவும் பழமை வாய்ந்த தூங்கு மூஞ்சி மரம் இருந்தது. அது, திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. அதற்குள் கவிதா, முருகன் ஆகியோர் சிக்கிக்கொண்டனர்.

இதில், கவிதா தலை மற்றும் உடல் நசுங்கியது. தகவல் கிடைத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இருவரையும் மீட்டனர். அதில், கவிதா இறந்தார். முருகன் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் உள்ளார்.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தை தலைமை செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர், ஒரு மணி நேரத்திற்கு பிறகு மரம் வெட்டி அங்கிருந்து அகற்றப்பட்ட. இந்த விபத்தில், அங்கிருந்த வாகனங்களும் நொறுங்கியது.

இறந்துப்போன கவிதா, அரக்கோணத்தை சேர்ந்தவர். தினமும், ஸ்கூட்டரில் வேலைக்கு வருவார். திருமணமாகி, தண்டையார் பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் அருண் குமார், சேலத்தில், கல்லூரி ஒன்றில் படிக்கிறார். இரண்டாவது மகன் விஷால், மண்ணடி பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். மகள் சினேகப்பிரியா பிஎஸ்சி நர்சிங் படிக்கிறார்.


காலையில் வேலைக்கு வந்த கவிதாவை, சக பெண் காவலர்கள் தேநீர் அருந்த அழைத்துள்ளனர். கவிதா நான் வரவில்லை என்றுள்ளார். எங்களுடன் தேநீர் அருந்த வந்திருந்தால், அவர் உயிர் தப்பி இருப்பார் என உருக்கமாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இறந்துப்போன காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.