சிஎஸ்கே அணியில் நீடிக்கும் தோனி? அடுத்த 3 சீசன்களுக்கு தக்கவைப்பு?

அடுத்துவரும் 3 ஐபிஎல் சீசன்களுக்கும் சிஎஸ்கே அணி கேப்டன் தோனியைத் தக்கவைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதே போல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நீடிப்பார் என்றும் சஞ்சய் கோயெங்காவின் லக்னோ அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


15-வது ஐபிஎல் டி20 சீசனில் 10 அணிகள் களம் காண்கின்றன. ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை மட்டும் தக்கவைத்து மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எந்த அணியில் எந்தெந்த வீரர்கள் இருப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், சிஎஸ்கே அணி, கேப்டன் தோனியை அடுத்த 3 சீசன்களுக்கு தக்கவைக்கும் என்றும், ரவிந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் இருவரையும் தக்கவைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியுடனும் சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆங்கில நாளேடு செய்தி தெரிவிக்கின்றது.


கடந்த இரு சீசன்களாக பஞ்சாப் கிங்ஸ் அணிைய சிறப்பாக வழிநடத்திய கே.எல்.ராகுல் விடுவிக்கப்படலாம். அவரை கோயங்காவின் லக்னோ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.


நவம்பர் 30ம் தேதிக்குள் அணிகள் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்பதால், ஐபிஎல் அணிகள் பட்டியலைத் தீவிரமாகத் தயாரித்து வருகின்றன.

தக்கவைக்கப்படும் வீரர்கள் (உத்தேசமாக):

சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி/சாம் கரன்

டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த், பிரித்வி ஷா, அக்ஸர் படேல், ஆன்ரிச் நோர்க்கியா.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, பொலார்டு, இஷான் கிஷன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், ஆன்ட்ரே ரஸல்.