லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: ஓய்வு பெற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தூக்கிட்டு தற்கொலை..!

சென்னை, வேளச்சேரி, தலைமை செயலக காலனியில் ஒய்வு பெற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை தொடர்ந்து, அவர் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.

சென்னை, வேளச்சேரி, தலைமை செயலக காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (63). இவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், ஆத்தூர், அம்மம் பாளையம் ஆகும். 1983ம் ஆண்டு, ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்வானார். சென்னை உள்ளிட்ட வனத்துறையில் பணியாற்றினார்.

பின்னர், சுற்று சூழல் இயக்குனராக பணியாற்றி கடந்த 2018ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த2019ம் ஆண்டு, தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.


இவர், பதவியில் இருந்தபோது தன் அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. அதன் பேரில், கடந்த செப்டம்பர் மாதம் வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா, அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 13.50 லட்சம், 6.5 கிலோ தங்கம், சந்தன மர பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், தலைமை செயலக காலனியில் இன்று காலை வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, போலீசார், அவர் தற்கொலை காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.