மணலியில் பைக், லாரி மோதல்..! முதியவர் பரிதாபமாக பலி:

சென்னை, மணலி பகுதியில் பைக், கண்டெய்னர் லாரி மோதியதில், முதியவர் உயிரிழந்தார். இதனால், போலீசாருடன் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, மாதவரம் பால்பண்ணையை சேர்ந்தவர் சீனிவாசன் (65). இன்று மாலை இவரது நண்பர் மனோகரன் என்பவருடன் மணலி புதுநகரில் உள்ள ஒருவரை பார்க்க பைக்கில் சென்றார். பைக்கை மனோகரன் ஓட்டினார், சீனிவாசன் பின்னால் அமர்ந்திருந்தார்.

மணலிபுதுநகர் அய்யா கோவில் அருகே வளைவில் பைக் திரும்ப முயற்சித்தது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி, பைக்கில் மீது மோதியது. இதில் சீனிவாசன் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

மனோகரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மனோகரனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார்  சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கண்டெய்னர் லாரிகளால் தொடர் உயிரிழப்பு ஏற்படுகிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன் (37), என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.