வீட்டு ஜன்னலில், கைவிட்டு பெண்களிடம் நகை திருட்டு: ஆந்திராவில், வாலிபர் கைது

சென்னை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில்  ஜன்னலில் கைவிட்டு தூங்கும் பெண்களிடம் நகை திருடிய வாலிபரை ஆந்திராவில் வைத்து கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரி, ராம்நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (84). இவர், கடந்த அக்டோபர் மாதம் 12- ம் தேதி வீட்டின் ஜன்னலோரம் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், சரஸ்வதி அணிந்திருந்த 8 சவரன்  தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

இது குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். இதேபோல வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் வீடுகளில் ஜன்னலோரம் படுத்து தூங்கும் பெண்களை குறி வைத்து தங்க நகைகளை பறித்து வந்தது. 

வேளச்சேரி காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபடுவது  ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திருலோச்சந்தர் (56) என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆந்திரத்துக்கு விரைந்த தனிப்படை திருலோச்சந்தரை திங்கள்கிழமை கைது செய்தனர். திருலோச்சந்தரிடம் திருட்டு நகைகளை வாங்கியதாக வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த அடகு கடை உரிமையாளர் உகமாராம் (40) என்பவரையும்  கைது செய்தனர்.