வீட்டுக்குள் நுழைந்து அத்து மீறல்: இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற, முதியவர் சிறையில் அடைப்பு

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில் வீட்டுக்குள் நுழைந்து இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, திருமணம் செய்து கொடு என மிரட்டிய முதியவரை கைது செய்தனர்.

சென்னை, கொருக்குப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன், இவரின் மகன் சீனிவாசலு (56) ஆவார். இவர் வீட்டருகே பிகாம் படித்து வேலை பார்க்கும் திருமணம் ஆகாத பெண் ஒருவர் தன் தாயுடன் வசித்து வருகிறார். 

இவர், விடுமுறை என்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவரின் தாய் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக அந்த பெண் இருந்துள்ளார்.

இதை நோட்டமிட்ட சீனிவாசலு வீட்டுக்குள் நுழைந்து, அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து, தவறாக நடக்க முயற்சித்தார். அந்த பெண் கத்தி கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்னர், சீனிவாசலுவை பிடித்து தர்ம அடி கொடுத்த்னர். இதையடுத்து, அவரை கொருக்குப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும், பெண்ணின் தாயிடமும் அசிங்கமாக பேசி உன் மகளை கட்டிக்கொடு என்றும் மிரட்டியதும் தெரியவந்தது. போலீசார், பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து, கொர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.