திருவிக நகரில் பயங்கரம்: தனியார் உணவு டெலிவரி ஊழியர் வெட்டிப்படுகொலை

சென்னை, திருவிக நகரில் தனியார் உணவு டெலிவரி ஊழியர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பம் தட்டு நெய்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் மணி (37). இவருக்கும் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த மோகனப்பிரியா (31) என்பவருக்கும், சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு சுபாசினி என்ற குழந்தை உள்ளது. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நீதிமன்றம் மூலம் விவகாரத்து பெற்றனர். தற்போது, பெரம்பூர் கென்னடி சதுக்கம் சாலையில் நண்பர் சேகர் என்பவருடன் தங்கி, அண்ணா நகர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

மனைவி பிரிந்த ஏக்கத்தில், மணி குடிப்பழக்கத்திற்கு ஆளாகினார். நேற்றிரவு திருவிக நகர் பல்லவன் சாலை, மாநகராட்சி விளையாட்டு திடலில் மது அருந்த மணி சென்றார்.

இரவு 11 மணியளவில், மணி தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடினார். தகவல் கிடைத்து, திருவிக நகர் போலீசார் விரைந்து சென்று, மணியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர் அங்கு உயிரிழந்தார். இது தொடர்பாக, திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மதுப்போதையில் கொலை நடந்ததா? அல்லது குடும்ப பிரச்சினையில் நடந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.