விஷ ஊசிப்போட்டு , அரசு மருத்துவர் சாவு..!யாரையும் துன்புறுத்த வேண்டாம்: உருக்கமான கடிதம் சிக்கியது

சென்னை, மயிலாப்பூர் ஓட்டலில் தங்கியிருந்த அரசு மருத்துவர் விஷ ஊசிப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். என் சாவுக்கு யாரும் காரணமல்ல, யாரையும் துன்புறுத்த வேண்டாம் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.

சென்னை, மதுரவாயல், கிருஷ்ணாபுரம் மூன்றாவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (34).  இவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

கடந்த புதன்கிழமை பணிமுடிந்த பின்னர், மகேஸ்வரன்  காரில் மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார்.


அப்போது, காரை வீட்டில் விட்டுவிடும்படி டிரைவர் கார்த்திக்கிடம்   கூறியுள்ளார். இந்நிலையில் மகேஸ்வரன் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பது தெரிந்து அவரது நண்பர் வினோத், இன்று அங்கு வந்தார். அவர் வெகுநேரம் மகேஸ்வரன் தங்கியிருந்த அறை கதவை தட்டியும், அவர் திறக்கவில்லையாம்.

இதையடுத்து வினோத், ஓட்டல் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே ஓட்டல் ஊழியர்கள், மாற்றுச் சாவி மூலம் மகேஸ்வரன் தங்கியிருந்த அறை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது படுக்கையில் மகேஸ்வரன் இறந்து கிடப்பதையும், அவர் அருகே விஷப் பாட்டிலும், ஊசியும் கிடப்பதை பார்த்து அதிர்ச்சிடைந்தனர்.


இது குறித்து தகவலறிந்த ராயப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மகேஸ்வரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது மகேஸ்வரன் எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடித்தத்தில்,தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை, யாரையும் துன்புறுத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.


இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், மகேஸ்வரன் தனது இடது கையில் விஷ ஊசியை செலுத்தி தற்கொலை செய்திருப்பது தெரிவித்துள்ளது. 

மகேஸ்வரனுக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இவரும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மகேஸ்வரன் தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் என்ன என்று  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.