கஞ்சா வழக்கில் கைதான வாலிபரின் கால் உடைப்பு; பரபரப்பு வாக்குமூலம்

சென்னை, காசிமேடு பகுதியில் கஞ்சா வழக்கில் கைதான நபரின் கால் உடைக்கப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, காசிமேடு போலீசார் கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்த தண்டையார் பேட்டை வ.உ.சி நகரை சேர்ந்த  நாகராஜ் மகன் முல்லை வேந்தன் (23) என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முல்லை வேந்தனை, தனிப்படை போலீசார் தான் கைது செய்தனர். ஆனால், அவரின் கால் உடைக்கப்பட்டிருந்தது, சட்டக்கல்லூரி மாணவரான முல்லை வேந்தனிடம், வக்கீல்கள் சிலர் வீடியோ ஆதாரம் எடுத்து அவரின் வாக்கு மூலத்தை சமூக வலைத்தளங்களில் போட்டுள்ளனர்.

அது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், போலீசாரின் ஜீப்பில் காலில் கட்டுப்போட்ட நிலையில் படுத்தபடி வாக்கு மூலம் கொடுக்கிறார்.

அதில், என் மீது 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு போட்டுள்ளனர். எஸ்.ஐ , காவலர் போலீசே இல்லாத ஒரு நபர் ஆகியோர் என் காலை உடைத்தனர்,

கோர்ட்டில், நாங்கள் சொல்வது போல் கூற வேண்டும், இல்லையென்றால் தாய், தங்கை மீதும் கஞ்சா வழக்கு போடுவோம் என்றனர்.

என் மீது என்ன வழக்கு போடட்டும் என் தாய், தங்கையை விட்டு விட சொல்லுங்கள் என அவர் கதறி அழுகிறார். ஆனால் போலீசார் தரப்பில் கூறும்போது; கடந்த நான்கு மாதம் முன்பே, முல்லை வேந்தன் மீது வழக்கு போட்டோம், ஆனால், ஏரியா மாறி தலைமறைவாகி விட்டார்.

ஈசாக் என்பவருடன் சேர்ந்து, கஞ்சா விற்பது மாமூல் வசூல் செய்வது தான் இவர் வேலையாகும் ஒரு ரவுடி வங்கி கணக்கில் இருந்து மாதம் ரூ.15 லட்சம் மாமூல் முல்லை வேந்தனுக்கு போகிறது. இவரை பிடிக்க தனிப்படை படாத பாடு பட்டுள்ளது. கால் உடைந்த நிலையில் தான் அவரை கைது செய்தோம் என கூறப்பட்டுள்ளது.