சுடு தண்ணீரில் கை வைத்த 11ம் வகுப்பு மாணவன் பலி: மின்சாரம் பாய்ந்ததில் விபரீதம்..!

சென்னை, வேளச்சேரி பகுதியில் சுடு தண்ணீரில் கை வைத்தபோது, வாட்ட ஹீட்டரில் மின்சாரம் பாய்ந்து 11ம் வகுப்பு மாணவன் பலியானான்.

சென்னை, வேளச்சேரி, கோவிலம்பாக்கம் சத்யா நகர் 7வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் மகன் ஷியாம் (15). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.


இந்த நிலையில், இன்று காலை ஷியாம் குளிப்பதற்காக மின்சார வாட்டர் ஹீட்டர் மூலம் ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் போட்டார். அப்போது தண்ணீர் சுட்டு விட்டதா என பார்ப்பதற்காக, ஷியாம் விரலை தண்ணீரில் விட்டு பார்த்துள்ளார்.

இதில் ஷியாம் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த அவர், மயங்கி கீழே விழுந்தார்.
 இதைப் பார்த்த பெற்றோர் ஷியாமை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஷியாம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.