நாடுமுழுவதும் 75 திருப்பூர்: பியூஷ் கோயல் திட்டம்..!

நாடுமுழுவதும் திருப்பூர் நகரைப் போன்று 75 ஜவுளி, ஆயத்த ஆடைகள் முனையங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

திருப்பூரில் மட்டும் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயத்தஆடைகள், ஜவுளி தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.

இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுடான ஆலோசனை மற்றும் கருத்தரங்கு நேற்று நடந்தது.

இதில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஜவுளி முனையங்கள் அனைத்தும் ரூ.50ஆயிரம் கோடி மதிப்புள்ள ஜவுளிப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முனையமும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

ஆயத்த ஆடைகள் தயாரிப்பை நிலைத்தன்மையாக்க புதியதொழில்நுட்பங்களை நாங்கள் கொண்டு வருவோம். திருப்பூர் நகரத்திலிருந்து ஏராளமான அனுபவங்களை நாங்கள் கற்போம்.

1985ம் ஆண்டு, திருப்பூர் ரூ.15 கோடி மதிப்புக்கு ஏற்றுமதி செய்ததது. 2022 மார்ச் மாதம் முடிவில் திருப்பூர் நகரம் ரூ.30ஆயிரம் கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி செய்கிறது.

அதாவது 2ஆயிரம் மடங்கு திருப்பூர் நகரம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஏறக்குறைய 37ஆண்டுகளில் திருப்பூர் நகரம் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது.

நாட்டில் ஜவுளித்துறையின் மதிப்பு என்பது ரூ.10 லட்சம் கோடியாகும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய ஜவுளித்துறை ரூ.20 லட்சம் கோடியாக வளர்ச்சி அடையும், ரூ.10 லட்சம் கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும்.

கடந்த 37ஆண்டுகளில் திருப்பூர் நகரம் ஜவுளித்துறையில் 23 சதவீதம்வளர்ச்சி அடைந்துள்ளது.

ஜவுளித்துறைக்கு உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் தொகையின் 2-வது முறை குறித்து மத்திய அரசு ஆலோசி்த்து வருகிறது.

ஜவுளித்துறை அமைச்சகம், தொழில்துறை, நிதி ஆயோக் ஆகியவற்றுடன் ஆலோசனை நடந்து வருகிறது.

ஒவ்வொரு துறையும் ஏற்கும்பட்சத்தில் இந்தத் திட்டம் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.