கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை: காரணம் இதுதான்

இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து நேற்று இரவு திடீரென உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு லெட்டர் ஆஃப் கிரெடிட் கொடுத்தவர்களுக்கு மட்டும் கோதுமை ஏற்றுமதி செய்யலாம். மற்றவகையில் கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் கோதுமை விலை அதிகரிப்பு, கோதுமையால் செய்யப்படும் பொருட்கள் விலை அதிகரித்து வருவது ஆகியவற்றைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்தபின் அங்கிருந்து கோதுமை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதியில் உக்ரைன், ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கின்றன.

உக்ரைன், ரஷ்யாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டதால், உலகளவில் 3-வது மிகப்பெரிய உற்பத்தியாளரான இந்தியாவின் பக்கம் உலக நாடுகளின் கவனம் திரும்பியது.

இந்தியாவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்ய உலக நாடுகள் ஆர்வம் காட்டி ஆர்டர்களை குவித்தனர். இதனால், உள்நாட்டு சப்ளைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இதனால் உள்நாட்டு சந்தையில் கோதுமை விலை படிப்படியாக அதிகரித்தது, கோதுமையால் செய்யப்படும் ரொட்டி, பிரட், நூடுல்ஸ், பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு அதிகமான வெயில் காரணமாக கோதுமை விளைச்சலும் பாதிக்கலாம் என மத்திய வேளாண்துறை அமைச்சகம் எச்சரித்திருந்தது.

இவை அனைத்தும் சேர்ந்து இந்தியாவில் கோதுமை தொடர்பான பொருட்களால் பெரும் சிக்கலை உருவாக்கக்கூடும், கோதுமைக்கு தட்டுப்பாட்டை உருவாக்கி, விலைவாசியை அதிகரிக்க வைக்கும் என்று மத்திய அரசு எண்ணியது.

இதையடுத்து, உடனடியாக கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்து நேற்று நள்ளிரவு உத்தரவிட்டது. இந்த ஆண்டு கடும் வெயில் காரணமாக கோதுமை உற்பத்தி 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறையக்கூடும் என உணவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கோதுமை உற்பத்தி 111 மில்லியன் டன்னாகஇருக்கும் எனக் கணித்திருந்த நிலையில் அதை 105 மில்லியன் டன்னாகக் குறைத்துவிட்டது.

வடமாநிலங்களில் நிலவும் கடும் வெயில், வெப்பஅலையால் விளைச்சல் பாதிக்கப்படலாம், கோதுமையின் தரம் குறையலாம், அறுபடை பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத வகையில் சில்லரைப் பணவீக்கம் 95 மாதங்களில் இல்லாத வகையில் 7.8 சதவீதமாக உயர்ந்தது. நுகர்வோர் பணவீக்கம் இரு மடங்கு அதிகரித்து 8.04 சதவீதமாக அதிகரித்தது.

உள்நாட்டில் கோதுமை விலை குவிண்டால் ரூ.2250 ஆக திடீரென அதிகரித்தது. இதன் காரணமாக உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது, விலைவாசி அதிகரிக்கக்கூடாது என்பதற்காக கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.