ரூ.34 ஆயிரம் கோடி வங்கி மோசடி: DHFL இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிட் (DHFL) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் கபில் வாத்வான், இயக்குநர் தீரஜ் வாத்வான் உள்ளிட்ட பலர் மீது ரூ.34,615 கோடி வங்கி மோசடி நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

சிபிஐ கடந்த 20ம் தேதி ஹெச்எப்எல் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்டசிபிஐ அதிகாரிகள், நேற்று மும்பையில் மட்டும் டிஹெச்எப்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான 12 இடங்களில் ரெய்டுநடத்தினர்.

சிபிஐ முதல்தகவல் அறிக்கையில் அமர்லிஸ் ரிலேட்டர்ஸ் சுதாகர் ஷெட்டி உள்ளிட்ட 8 பில்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

17 வங்கிகள் கூட்டமைப்பு சேர்ந்த யூனியன் பேங்க் ஆப் இந்தியா கடந்த 2010 முதல் 2018ம் ஆண்டுவரை டிஹெச்எல்எப் நிறுவனத்துக்கு ரூ.42,871 கோடி கடன் கொடுத்திருந்தது.

ஆனால் இந்தப் பணத்தை டிஹெச்எல்எப் இயக்குநர்கள் தவறாக கையாண்டதாகப் புகார் எழுந்தது.

டிஹெச்எல்எப் இயக்குநர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் இருவரும் சதித்திட்டம் தீட்டி, ஆதாரங்களை மறைத்தும், ஏமாற்றியும், மக்களின் பணத்தில் ரூ.34,614 கோடி மோசடி செய்தனர்.

2019ம் ஆண்டிலிருந்து வங்கிக்கடனையும் செலுத்தவில்லை என்று வங்கிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

டிஹெச்எப்எல் சார்பில் நடத்தப்பட்ட கணக்குத் தணிக்கையில் நிறுவனம் பல்வேறு நிதி முறைகேட்டிலும், நிதியை வேறுபக்கம் திருப்பியும், கணக்குகளை தவறாக எழுதியும், மக்கள் பணத்தை செலவிட்டது தெரியவந்தது.

குறிப்பாக கபில், தீரஜ் தவண் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

டிஹெச்எல்எப் நிறுவனம் வங்கிகளில் வாங்கிய கடன் அனைத்தும் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் டிஹெச்எல்எப் இயக்குநர்கள் கபில் மற்றும் தீரஜ் வத்வான் இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸும் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் டிஹெச்எப்எல் இயக்குநர்கள் கபில், தீரஜ் வாத்வான் இருவரும் மோசடி செய்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதை சிபிஐ கண்டறிந்தது.

இதையடுத்து, இருவர் மீதும், இன்னும் சில ரியல்எஸ்டேட் நிர்வாகிகள்மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது.