டேராடூன் சென்ற சிபிசிஐடி, சிவசங்கர் பாபாவிடம் விசாரணை; சென்னைக்கு அழைத்து வரவும் ஏற்பாடு

டேராடூன் சென்ற சிபிசிஐடி போலீசார் பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவிடம் விசாரணையை தொடங்கியது. கைது செய்து சென்னை அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, கேளம்பாக்கம் பகுதியில் பிரபலமான தனியார் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையை போலீசார் 354 பெண்ணை மானபங்கம் படுத்துதல், 363 பிள்ளை பிடித்தல், 366 பெண்ணை வசியம் செய்து பாலுணர்ச்சியை தூண்டுதல், பெண் வன்கொடுமை சட்டம் என ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன. டிஎஸ்பி குணவர்மன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் புகார் அளித்த 3 மாணவிகளின் வாக்கு மூலத்தை பெற்றனர். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லை என டேராடூன் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரிடம் விசாரணை நடத்த டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான குழு நேற்று இரவு டேராடூன் சென்றனர். இதற்கிடையில் அவர் தப்பித்து செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளன. டேராடூன் சென்ற சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவிடம் விசாரணையை தொடங்கினர். கைது செய்து சென்னைக்கு அழைத்து வரவும் ஏற்பாடு நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.