சபாநாயகர்-தி.மு.க அரசை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்தி கைதான பழனிசாமி உட்பட 950 பேர் மீது வழக்கு..!

முன்னாள் அமைச்சர் உதயகுமாரை எதிர்கட்சி துணை தலைவராக நியமிக்காத சபா நாயகர் மற்றும் தி.மு.க அரசை கண்டித்து, வள்ளுவர்கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வரும், எதிர் கட்சி தலைவருமான பழனிசாமி உட்பட 950 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
ஆடு, மாடு போல அடைத்து, தண்ணீர் கூட தரவில்லை என மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
சட்டசபையில் நேற்று முன் தினம், எதிர்கட்சி துணை தலைவராக பன்னீர்செல்வத்துக்கு பதில் முன்னாள் அமைச்சர் உதயகுமாரை நியமிக்கக்கோரி சபாநாயகர் இருக்கைக்கு முன் அமர்ந்து, எதிர் கட்சி தலைவர் பழனிசாமி, தன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், சபைக்காவலர்களால் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., எம்.எல்.ஏக்களை குண்டுகட்டாக வெளியேற்றினர்.

இந்த நிலையில், சட்டசபையில் நடைபெறும் ஜன நாயக விரோதம் மற்றும் சபா நாயகர் செயலை கண்டிக்கும் வகையில் வள்ளுவர் கோட்டத்தில், முன்னாள் முதல்வரும், எதிர் கட்சி தலைவருமான பழனிசாமி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவதற்கு, நேற்று முன் தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மனு ஒன்றை அளித்தார். போலீசார், இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர்.
தடையை மீறி போராட்டம்; கைது
அனுமதி மறுத்ததை தொடர்ந்து , நேற்று தடையை மீறி போராட்டம் நடத்த பழனிசாமி முடிவு செய்தார். முன்னாள் அமைச்சர்கள் , மூத்த நிர்வாகிகளுடன் அவர் போராட்டம் நடத்துவதாக வந்த தகவலையடுத்து, வள்ளுவர் கோட்டத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் தயாராக கைது செய்து கொண்டு செல்வதற்கு, அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.
வள்ளுவர் கோட்டம் பகுதியில், நேற்று காலை பழனிசாமி , முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி, காமராஜ், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், மூத்த நிர்வாகிகள் கே.பி முனுசாமி உட்பட 450க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். அவர்களில் பலர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். திடீரென அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபாநாயகரை கண்டித்தும், நீதி நீதி வேண்டும். தி.மு.க. ஆட்சி ஒழிய வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து, பழனிசாமி உட்பட 450 பேரை உடனடியாக கைது செய்து, பேருந்துகளில் ஏற்றினர்.
அப்போதும், போலீசாருக்கும், அ.தி.மு.க வினருக்கும் இடையே மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, கைதான அனைவரையும், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்தனர்.
அதை தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்திற்கு வந்த அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். 100 பெண்கள் என மொத்தம் 950 பேர் கைதாகி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நுங்கம்பாக்கம் போலீசார், பழனிசாமி உட்பட அனைவர் மீதும் தடையை மீறி, சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.