ஒவைசிக்கும், ஜின்னா மனநிலைக்கும் எந்த வேறுபாடும் இல்லை: பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி கருத்து

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசிக்கும், முகமது அலி ஜின்னா மனநிலைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலம், பாரபங்கியில் கடந்த வாரம் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி பேசுகையில் “வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் முடிவு எடுத்ததைப் போல், குடியுரிமைத் திருத்தச்சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும், அந்த முடிவு எடுக்க வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.


என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு சட்டம் கொண்டுவந்தால், மீண்டும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்துவோம், இங்கு ஒரு சாஹின்பாக்கை உருவாக்குவோம்.

நானும்கூட இங்குவந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் ” எனத் தெரிவித்தார். ஒவைசியின் இந்தப் பேச்சு குறித்து பாஜக தேசியப் பொதுச்செயலாலர் சி.டி.ரவி நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் “ ஒவைசியின் மனநிலையைப் பொறுத்தவரை, ஜின்னா மனநிலைக்கும், அவரின் மனநிலைக்கும் எந்தவேறுபாடும் இல்லை.

மும்பை தீவிரவாத தாக்குதலில் கைதான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் அல்லது ஒசாமா பின்லேடன் போன்று நடந்தால், இதுபோன்ற வன்முறைகளைத் தடுக்கும் திறனும் இந்தியாவுக்கு இருக்கிறது என்று ஒவைசியிடம் நான் தெரிவிக்கிறேன்.


குடியுரிமைச் சட்டம் என்பது இந்தியாவுக்கு அகதிகளாக வருவோருக்கும், மதரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதாகும்.

அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கவேண்டுமென்றால், 3 நாடுகள், தங்களை இஸ்லாமியதேசம் என்ற அடையாளத்தை திரும்பப் பெற்று, மதரீதியான சகிப்புத்தன்மையை ஏற்க வேண்டும்.


இல்லாவிட்டால் அகண்டபாரதம் கனவு என்பது ஒவ்வொருவரும் குடியுரிமை பெறும்போது நிறைவேறும். பெரிய சதித்திட்டத்தின் ஒருபகுதியாக ஜிகாத் மூலம் இந்தியாவை ஆக்கிரமித்து சிலர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக வந்துள்ளனர்.


சட்டவிரோத குடியேறிகளுக்கு தேசத்தில் இடமில்லை. மதரீதியான புறக்கணிப்பைச் சந்தித்தவர்களுக்கு, அகதிகளாக வருவோருக்கு இடமுண்டு வரவேற்கப்படுகிறார்கள்.”
இவ்வாறு ரவி தெரிவித்தார்.