குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்? பாஜக நாடாளுமன்ற குழு இன்று கூடுகிறது

பாஜகவின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் நாடாளுமன்றக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடக்கிறது, 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

வரும் 29ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசிநாளாகும். இதுவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் பொதுவேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் பாஜகவின் உயர்மட்டக் குழுவான நாடாளுமன்றக் குழு இன்று மாலை டெல்லியில் கூடுகிறது.

இன்று சர்வதேச யோகா தினம் என்பதால் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால் அதைமுடித்துவிட்டு, மாலை நடக்கும் பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்ய பாஜக ஏற்கெனவே 14 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறது.

அந்தக் குழுவில் “மத்தியஅமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத்ஒருங்கிணைப்பாளராகவும், பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே, டிசி ரவி துணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் உள்ளனர்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கிஷன் ரெட்டி, சர்பானந்த சோனாவல், பாரதி பவார், அர்ஜூன் மேக்வால் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இது தவிர, தரும்சுக், டி.கே.அருணா, ருதுராஜ் சின்ஹா, வானதி ஸ்ரீனிவாசன், சம்பித் பத்ரா, ராஜ்தீப் ராய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் எலெக்டோரன் கொலோஜ் படி 10.86 லட்சம் வாக்குகள் இருக்கிறது.

இதில் பாதிக்கு மேல் வெற்றி பெறும் வேட்பாளர் பெற வேண்டும். அந்தவகையில் பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாதிக்கு மேல் வாக்குகளைப் பெற சிறிதளவு குறைவாக இருக்கிறது.

இதையடுத்து, வேறு கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பிஜூஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக், பரூக் அப்துல்லா ஆகியோரின் ஆதரவைக் கோருவார்கள் எனத் தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் சார்பிலும் பொதுவேட்பாளர் நிறுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

கடந்த 15ம் தேதி மம்தா பானர்ஜி தலைமையில் கூடி விவாதித்து, சரத் பவார் பெயரையும், பரூக் அப்துல்லா பெயரையும் முன்மொழிந்தனர். ஆனால், இருவருமே அதை நிராகரித்தனர்.

மே.வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியும் வேட்பாளராகப் போட்டியிட மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து முன்னாள் மத்தியஅமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக நியமிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இன்று நடக்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம்.