பிஹாரில் ஆட்சி மாற்றம் வருமா? அரசியல் கணக்கு என்ன? ஆர்ஜேடியுடன் நிதிஷ் கூட்டணி அமையுமா?

பிஹாரில் ஆட்சி மாற்றம் வருமா, பாஜகவுடனான உறவை கைகழுவிவிட்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியுடன் முதல்வர் நிதிஷ் குமார் கைகோர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த விஷத்தை முடிவு செய்யவே பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையில் அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா அல்லது விலகுவதா, அல்லது விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

பாஜகவும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்து கடந்த 2020ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்தன. இதில் கடும் இழுபறிக்குப்பின் பாஜக, நிதிஷ் கூட்டணி வென்றது.

தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி இருந்தது. ஆனாலும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு போதமான எம்எல்ஏக்கள் இல்லை என்பதால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

இதையடுத்து 2வது முறையாக பாஜக, ஐக்கிய ஜனத தளம் கூட்டணி ஆட்சி அமைந்தது. 2 ஆண்டுகள் முடிந்தநிலையில், நிதிஷ் குமாருக்கும், பாஜகவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து நிதிஷ் குமார் ஆலோசித்து வருகிறார்.

பாஜவைப் பொறுத்தவரை கூட்டணி அமைத்து ஆளும் சில மாநிலங்களில் பிஹாரும் ஒன்று.

பெரும்பாலும் கூட்டணியில் பாஜக இருந்தாலே கூடியவிரைவில் கூட்டணிக் கட்சியை மூழ்கடித்துவிட்டு, அந்தக் கட்சி எம்எல்ஏக்கள் கபளீகரம்செய்து தனித்து ஆட்சி அமைப்பதையே வழக்கமாக வைத்துள்ளது.

இந்தக் கொள்கையைத்தான் பலமாநிலங்களில் பின்பற்றி வருகிறது. சமீபத்திய உதாரணம், மகாராஷ்டிரா

பிஹாரிலும் இதே முறையைப் பின்பற்றி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ஆர்சிபி சிங் தலைமையில் கட்சியை உடைத்து எம்எல்ஏக்களை இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக நிதிஷ்குமாருக்கு தகவல் வந்தது.

இதனால் விழிப்படைந்த நிதிஷ்குமார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பாஜகவுடனான கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் வெளியேறினால் அவரை அரவணைக்க லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் தயாராக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியுடனும் நிதிஷ் குமார் பேசி வருவதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பிஹாரின் அரசியல் கணக்கு என்ன, நிதிஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து வெளிறியானால், ஆர்ஜேடியுடன் சேர்ந்துஆட்சி அமைக்கமுடியுமா என்பதைப் பார்க்கலாம்.

பிஹாரில் சட்டப்பேரவை 243 உறுப்பினர்களைக் கொண்டது. இங்கு ஆட்சிஅமைக்க 122 எம்எல்ஏக்கள் ஆதரவு ஒரு கட்சிக்குத் தேவை.

ஆனால், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 74 எம்எல்ஏக்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 43, விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி கட்சி)4, இந்துஸ்தான் அவாமி மோச்சா (ஹெச்ஏஎம்)4 இடங்கள் உள்ளன.

ஏறக்குறைய பெரும்பான்மைக்குத் தேவையான 122 எம்எல்ஏக்களைவிட கூடுதலாக 3பேருடன் ஆட்சியில் இருக்கிறது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 75 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சிக்கு19, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2, மார்க்சிஸ்ட் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

எதிர்க்கட்சிகளிடம், 110 எம்எல்ஏக்கள் உள்ளனர். இப்போது நிதிஷ் குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியுன் சேர்ந்தால், 153 எம்எல்ஏக்களாக உயர்ந்து, ஆட்சி அமைக்க முடியும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு ஆட்சி கவிழும்.

இதர கட்சிகளான ஒவைசியுடன்(5 இடங்கள்) உதரிக்கட்சிகள் 3 இடங்களுடன் சேர்ந்தாலும் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது.

அதிலும் அசாசுதீன் ஒவைசி பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்ப்பில்லை.

ஆதலால், நிதிஷ் குமார் பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் பெரும்பான்மையுடன் புதிய ஆட்சி அமைக்க முடியும். பாஜக ஆட்சியை இழக்கும்.