பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை; கைதான நால்வரை காவலில் எடுக்க முடிவு..!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொன்ற வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் நால்வரை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளிக்க உள்ளனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர்,33, இவர், பாஜக எஸ்.சி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தார்.

இவர் மீது, இரு கொலை முயற்சி உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலில் இருந்து, இவர் பெயர் சில மாதங்களுக்கு முன் தான் நீக்கப்பட்டது.

பாலசந்தருக்கு,  துப்பாக்கி ஏந்திய பாலமுருகன் என்பவர் பாதுகாவலாரக இருந்தார்.

இவருக்கும், சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி தர்கா மோகன் மகன்கள் பிரதீப் (22), சஞ்சய் (20), கலைராஜன் (23) ஜோதி(22) ஆகியோருக்கிடையே முன் விரோதம் இருந்தது.

துணிக்கடைகளில் மாமூல் கேட்ட, பிரதீப், சஞ்சய் ஆகியோரை பால சந்தர் போலீசில் பிடித்துக்கொடுத்தார்.

அதைப்போன்று, வசந்தா என்ற பெண்ணை வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டிய தர்கா மோகன், அவரின் மருமகன் தினேஷ்குமார் ஆகியோரையும் பால சந்தர் சிறைக்கு அனுப்பினார்.

இந்த விரோதத்தில், கடந்த ,24ம் தேதி, சாமி நாயக்கன் தெருவில், பால சந்தர் இருந்தபோது, வெட்டிக்கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் டீ சாப்பிட சென்றிருந்த பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சேலத்தில் பதுங்கியிருந்த பிரதீப், சஞ்சய் உள்ளிட்ட நால்வரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், அலட்சியமாக இருந்த காரணத்துக்காக, சிந்தாதிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த கொலையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதால், சிறையில் இருக்கும் நால்வரை காவலில் எடுத்து விசாரிக்க, வரும் திங்கள் கிழமை, கோர்ட்டில் மனு அளிக்க உள்ளனர்.