பாரத் ஜோடோ யாத்ரா நிறைவு! கொட்டும் பனிமழையிலும் காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி பேரணி

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் காங்கிரஸ் நடத்திய பேரணியில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கடும் பாதுகாப்புக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியின் பேரணி ஷெர் இ காஷ்மீர் கிரிக்கெட் அரங்கில் நடந்தது.

ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டார்.

இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியணா, டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைக் கடந்து 4ஆயிரம் கி.மீ நடந்துள்ளார்.

இந்த யாத்திரையில் ராகுல் காந்தி 12 பொதுக்கூட்டங்கள், 100 சாலை ஓரக் கூட்டங்கள், 13 பத்திரிகையாளர் சந்திப்புகள், 275 நடைபயண பேச்சுகள், 115 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

ராகுல் காந்தி நடைபயணம் இன்று முடிந்ததையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்தப்படுகிறது. இதற்காக கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

பேரணிக்கு முன்பாக, ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஒருவருக்கு ஒருவர் பனிக்கட்டியை தூக்கி எறிந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்தக் காட்சியைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

முன்னதாக ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பாரத் ஜோடோ யாத்திரைக்கான நினைவுச்சின்னத்தை திறந்து வைத்தார்.

காங்கிரஸ் கட்சி நடத்திய பேரணியில், தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, ராகுல் காந்தி, திமுக, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், புரட்சிகர சோசலிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாலர் டி ராஜா கூறுகையில் “பாஜகவுக்கு எதிரான மனநிலையுடைய அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்.

ஒன்றாக சேர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திரத்துக்காகப் போராடினோம், பாஜக ஆட்சியை அகற்ற அனைத்து மதர்சார்பற்ற கட்சிகளும் இணைந்து போராட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில் “ராகுல் காந்தி கிழக்கில் இருந்து மேற்கு வரை மற்றொரு யாத்திரையை ராகுல் காந்தி நடத்த வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியை நான், எனது தந்தை, கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம். ராகுல் நடைபயணம்வெற்றியாக முடிந்துள்ளது.

பாஜகவை விரும்புபவர்கள்கூட, சகோதரதத்துவதத்தை விரும்புகிறார் என்பதை யாத்திரை வெளிப்படுத்திவிட்டது” எனத் தெரிவித்தார்.

பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி பேசுகையில் “ராகுல் காந்தியின் வடிவில் இந்த தேசம் நம்பிக்கையைப் பார்க்கிறது” எனத் தெரிவித்தார்.