வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் பந்த்: டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்: பாஜக ஆளாத மாநிலங்கள் பந்த்துக்கு ஆதரவு

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு ஓர் ஆண்டு நினைவையொட்டியும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாடுமுழுவதும் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நடத்தும் இந்த பாரத் பந்த்துக்கு பாஜக ஆளாத மற்ற மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா சார்பில் நடத்தப்படும் இந்த பந்த்தால் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பாரத் பந்த் நடக்கும் போது, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக அமைப்புகள் மூடப்படும், பொது நிகழ்ச்சிகள் நாடுமுழுவதும் ரத்து செய்யப்படும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்திருந்தது.

ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவிதமான சிக்கலும் இல்லை. டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் சில நகரங்களில் மட்டும் ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேசமயம், அவசரப் பணிகள், அத்தியாவசியச் சேவைகள், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மீட்புப்பணி, நிவாரணப் பணிகள், தனிப்பட்ட அவசரப் பணிகளுக்குத் தடையில்லை என்றும் விவசாயிகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.

இந்த பாரத் பந்த்துக்கு நாடுமுழுவதும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன, 15 வர்த்தக அமைப்புகள், அரசியல் கட்சிகள், 6 மாநில அரசுகள், சமூகத்தின் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகம், சத்தீஸ்கர், கேரளா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாரத் பந்த்துக்கு ஆதரவு அளித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், அனைத்து இந்திய ஃபார்வேர்ட் பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி, தெலுங்குதேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஸ்வராஜ் இந்தியா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

வழக்கறிஞர்கள் சார்பில் பல்வரு பார் அமைப்புகளும், யூனியன்களும் விவசாயிகளின் பாரத் பந்த்துக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளன.