இந்தியாவில் கால்பந்தாட்டத்தின் நிலை இதுதான்!; ஐஎஸ்எல் ஒவ்வொரு சீசனிலும் ரூ. 25 கோடி இழப்பு- பெங்களூர் எஃப்சி உரிமையாளர் பரபரப்புக் கடிதம்

இந்தியாவில் கால்பந்தாட்டத்தை பரவலாக்கும் நோக்கில் 2013ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியால் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடங்கப்பட்டது. ஐபிஎல் பாணியில் தொடங்கப்பட்ட இந்த ஆட்டம் ஆண்டு தோறும் அக்டோபர் அல்லது நவம்பர் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் கடந்த நவம்பர் 20 கோவா மாநிலத்தில் தொடங்கியது. இந்நிலையில் நேற்று கோவா, திலக் மைதான் அரங்கில் ஹைதரபாத் மற்றும் பெங்களுரூ அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.

இந்த சூழலில் பெங்களூர் எஃப்சி அணியின் உரிமையாளரான பார்த் ஜிண்டால், ஐஎஸ்எல் நிறுவனர் நீதா அம்பானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்கடிதத்தில் பார்த் ஜிண்டால் கூறியுள்ளதாவது:

கொரோனா காலகட்டத்தில் டிக்கெட் விற்பனை குறைந்ததாலும், ஸ்பான்சர்களை இழந்ததாலும், மைதான பராமரிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாலும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அணிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 கோடி வரையிலான மானியத்தை ரிலையன்ஸ் அறக்கட்டளை ரத்து செய்ததால் நிலைமை மிக மோசமாகியுள்ளது. இந்த இழப்புகளால் பெங்களூர் எஃப்சி அணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்எல் போட்டிகளில் நாங்கள் இணைந்தது முதல் இப்போது ஒவ்வொரு சீசனிலும் ரூ.25 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த சீசனில் இழப்பு இன்னும் கூடியிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பார்வையாளர்கள் யாருமின்றி துபாயில் நடத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிசிசிஐ-க்கு ரூ.4000 கோடி லாபம் கிடைத்ததாக கூறப்பட்ட நிலையில் ஐஎஸ்எல் கால்பந்தாட்ட போட்டியின் முன்னணி அணியாக விளங்கும் ஒரு அணியின் உரிமையாளர் இப்படி புலம்பி கடிதம் எழுதியிருப்பது விளையாட்டுத் துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.