பொறுமையா இருங்க! நாங்க சொன்னதைச் செய்வோம்: அமெரிக்கா, தைவானுக்கு பதிலடி தரத்தயாராகும் சீனா

ஒன்றுபட்ட சீனாவின் கொள்கைக்கு விரோதமாகச்செயல்பட்ட அமெரிக்கா, தைவானுக்கு தகுந்த, வலிமையான பதிலடி கொடுக்கும்வகையில் சீனா தயாராகி வருகிறது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான் பெலோசி தைவானுக்கு வந்துசென்றுவிட்டாலும், இன்னும் பதற்றம் குறையவில்லை.

தைவானை அச்சுறுத்தும் வகையில் தைவானைச் சுற்றி அதன் வான்வெளியில் சீனப் போர்விமானங்கள் போர் பயிற்சியில்ஈடுபட்டு வருகின்றன.

தைவான் என்பது சீனாவின் ஒரு அங்கும் என்று சீனா கூறி வருகிறது. ஆனால், தைவானோ சீனாவின் அங்கம் அல்ல. தனி நாடு, சுதந்திரமானது என்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே தைவானின் சுதந்திரம், தன்னாட்சி குறித்து உலக நாடுகள் பேசினாலும் சீனாவின் முகம் சிவக்கிறது, கோபம் கொப்பளிக்கிறது.

எந்த நாட்டுத் தலைவர்களையும் தைவானுக்குச் செல்ல சீனா அனுமதிப்பதில்லை, அவ்வாறு சென்றாலும் கடுமையாக எதிர்க்கிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்காவிலிருந்து மூத்த அரசியல்தலைவர் ஒருவராக நான்சி பெலோசி தைவானுக்கு நேற்றுமுன்தினம் பயணம் மேற்கொண்டார்.

தைவானுக்கு பெலோசி வரக்கூடாது என்று சீனா கடுமையாக எதிர்த்தது. ஆனால், அதையும் மீறி தைவானுக்குவந்தார். அவருக்கு அங்கு சிவப்புக்கம்பள வரவேற்கு அளிக்கப்பட்டது.

நான்சி பெலோசி பேசுகையில் “தைவானைக் கைவிடமாட்டோம். ஜனநாயகத்தை அமெரிக்கா தொடர்ந்து ஆதரிக்கிறது.

தைவானுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும்.தைவானுக்கு வரும் தலைவர்களை சீனா தடுக்கக்கூடாது” எனத் தெரிவித்தார்.

பெலோசியின் தைவானா வருகைக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த சீனா, “அமெரிக்கா-சீனா இடையிலான நட்புறவு மோசமான நிலைக்குச்செல்லும்” என்று எச்சரித்தது.

இந்நிலையில் பெலோசி தைவானைவிட்டு சென்றபின், தைவானை மிரட்டும் வகையில் அந்நாட்டு வான்வெளியில் 27 அதிநவீன போர்விமானங்களை பறக்கவிட்டு போர் ஒத்திகையில் சீனா ஈடுபட்டு வருகிறது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹூவா சுன்யிங் பேட்டியளித்தார்.

அப்போது அவரிடம், அமெரிக்கா, தைவானுக்கு எதிராக நடவடிக்கை ஏதும் இருக்குமா என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் கூறுகையில் “நாங்கள் சொன்னதைச் செய்வோம். தயவு செய்து பொறுமையாக இருங்கள்.

எங்கள் பதிலடி வலிமையாக இருக்கும், திறன்மிக்கதாக, தீர்மானமாக இருக்கும்”எனத் தெரிவித்தார்.

சீனாவில் அடுத்த சில மாதங்களில் 3-வது முறையாக அதிபராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட உள்ளார்.

ஏற்கெனவே 10 ஆண்டுகள் அதிபராகஇருந்த ஜி ஜின்பிங் 3வது முறையாக வாழ்நாள் அதிபராக பதவி ஏற்கலாம்.

அதற்கு முன்பாக மக்களிடம் பெரிய அளவில் ஆதரவைப் பெற சீனா தகுந்த பதிலடி ஏதும் அளிக்கலாம்.