இந்தியாவுக்கு போகாதீங்க: கொரோனா அதிகரிப்பால் மக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரி்ககா தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அமைப்பு (சிடிசி) 4-வது படிநிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில் “இந்தியாவில் தற்போது நிலவும் சூழலில், யாரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சூழலில் அமெரிக்க மக்கள் இந்தியாவுக்கு பயணம் செய்வது ஆபத்தானது.

கொரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும். ஆதலால், இந்தியாவுக்கு பயணம் செய்வதைத் தவிருங்கள்.

COVID-19 surgeபிரதமர் மோடி

இந்திய மக்கள் முழுமையாக தடுப்பூசி போடாத சூழலில் அந்நாட்டுக்கு பயணம் செய்வது தவிர்க்கப்பட வேண்டியது.அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும், 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும், கூட்டத்தினரைத் தவிர்க்க வேண்டும், கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 200 நாடுகளில் 34 நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. அதில் சாட், கொசாவோ, கென்யா, பிரேசில், அர்ஜென்டினா, ஹைதி, மொசாம்பிக், ரஷ்யா, தான்சானியா ஆகியவை அடங்கும்.