ஆட்டோ தொழிலாளி கொலை; போதை மறு வாழ்வு மைய உரிமையாளர் சரணடைந்தார்

போதை மறுவாழ்வு மையத்தில், சிகிச்சை பெற வந்த ஆட்டோ தொழிலாளியை அடித்துக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த, அதன் உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சென்னை, ராயப்பேட்டை, பெரியார் திடலை சேர்ந்தவர் ராஜ் (45). இவர், ஆட்டோவுக்கு ரீப்பர் அடிக்கும் பணி செய்தார். மதுப்போதைக்கு அடிமையானார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்,  அங்குள்ள வெஸ்ட் காட் சாலையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.

மூன்று மாத சிகிச்சைக்கு பிறகு, ராஜ் வீடு திரும்பினார். ஆனால், அவர் மீண்டும் மது குடித்து விட்டு வந்ததால்,  கடந்த 3ம் தேதி இரவு, அதே போதை மறுவாழ்வு மையத்தில் , அவரை சேர்த்தனர். ஆனால், அவர் அங்கு திடீரென இறந்தார்.

அவரின் மனைவி கலா, தன் கணவரை அடித்துக்கொன்றதாக, அண்ணா சாலை போலீசில் புகார் அளித்தார். விசாரணைக்கு பிறகு, ராஜ் அடித்துக்கொன்றது தெரிந்தது. போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

போதை மறுவாழ்வு ஊழியர்களான யுவராஜ் (26), செல்வமணி (38), சதீஷ் (29), கேஷவன் (42), சரவணன் (48), மோகன் (34), பார்த்தசாரதி (23) ஆகிய ஏழு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.  

தலைமறைவான உரிமையாளர் லோகேஸ்வரி, அவரின் கணவர் காத்திக்கேயனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கோவை நீதி மன்றத்தில், கார்த்திக்கேயன் சரணடைந்தார். அவரை, சென்னை அழைத்து வருவதற்கு, தனிப்படை கோவைக்கு சென்றது. லோகேஸ்வரியை தேடி வருகின்றனர்.