துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை..!

சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, கழிவறைக்கு சென்று, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, ஆயுதப்படை காவலர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணிச்சுமை காரணமா எனவும் விசாரணை நடக்கிறது.

மதுரை மாவட்டம், செல்லூர், 5வது தெரு, சூரியராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை, இவரது மகன் செந்தில் குமார் (31). இவர், 2011ம் ஆண்டு, தமிழ் நாடு காவல் துறையில், பணிக்கு சேர்ந்தார்.

தற்போது, சென்னை, புதுப்பேட்டை, 29வது பின்காய் ஆயுதப்படை பிரிவில், காவலராக பணியாற்றி வந்தார்.

இவர், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், பாதுகாப்பு பணியில் இருந்தார்.

இன்று மதியம், 12.25 மணியளவில், ஆண்கள் கழிவறைக்கு, செந்தில்குமார் சென்றார். சிறிது நேரத்தில், பயங்கர சத்தம் கேட்டு, சக காவலர்கள் ஓடி வந்தனர்.

கழிவறை உள் பக்கம் பூட்டப்பட்டிருந்தது. கமாண்டர் ராமமூர்த்தி என்பவர், கதை உடைத்து பார்த்தார். அங்கு செந்தில் குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

செந்தில் குமார் கையில் வைத்திருந்த எஸ்.எல்.ஆர் ரக துப்பாக்கியால் வலது புற மார்பில் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது. குண்டு அவரின் மார்பை துளைத்திருந்தது.

தகவல் கிடைத்து பெரியமேடு போலீசார் , சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, செந்தில் குமார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 13ம் தேதி முதல், அவர், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், செந்தில் குமார் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா முடிந்தும், அங்கு அவருக்கு தொடர்ந்து இருந்ததால், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்க்காரர்  ஒருவர், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம், காவல் துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.