அந்நியன் ரீமேக் – நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கப் போறது யார் தெரியுமா?

கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இந்தப் படத்துக்குப் பின் ராம் சரண் நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷங்கர். தில் ராஜு தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது. பெரும் பொருட் செலவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என அத்தனை பிரதான மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு படங்களுக்குப் பின், ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார். இதற்கான பேச்சுவார்த்தை இறுதியடைந்துள்ளது. இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தின் ரீமேக் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். இப்படத்தில் சதா கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் நடிகை யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக கியாரா அத்வானியிடம் ஷங்கர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ‘எம்.எஸ் தோனி’, ‘லட்சுமி பாம்’, ‘கபீர் சிங்’ உள்ளிட்ட பல படங்களில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.