மதுப்போதையில் தகராறு; லாரி ஓட்டுநர் கொலை; நண்பர் கைது

மதுப்போதையில் ஏற்பட்ட தகராறில், லாரி ஓட்டுநரை குத்திக்கொன்ற வழக்கில், நண்பர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, நெற்குன்றம், சிடிஎன் நகர், ரேசன் கடைத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). இவர், கழிவுநீர் லாரி ஓட்டுநர். அதே பகுதி ஜெய்ராம் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராமு (என்கிற) ராமச்சந்திரன் (34) இவரும், லாரி ஓட்டுநர் ஆவார்.

 
கடந்த 10ம் தேதி அன்று, நெற்குன்றம், என்டி பட்டேல் சாலையில்   காலி மைதானம் ஒன்றில் இவர்கள் இருவரும், மது அருந்தினர். அப்போது, மதுப்போதையில், அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர், கைகலப்பாகி,  ராமச்சந்திரன் அங்கு கிடந்த ஒரு கூர்மையான கம்பியால், சுப்பிரமணியனை குத்தினார். இதில் சுப்பிரமணியன் தலை,முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், சுப்பிரமணியனை மீட்டு, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர்.

இது தொடர்பாக கோயம்பேடு போலீசார், கொலை முயற்சி  வழக்குப் பதிவு செய்து, ராமச்சந்திரனை உடனே கைது செய்தனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் நேற்று இறந்தார். இதனால்,  கொலை வழக்காக மாற்றப்பட்டது.