மியான்மரில் அவசரநிலை: அடுத்த ஓர் ஆண்டுக்கு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது

ஆன் சான் சூகி

மியான்மர் நாட்டில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அகற்றிவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அடுத்த ஓர் ஆண்டுக்கு அவசரநிலை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய பர்மா நாடுதான் பெயர்மாற்றம் செய்யப்பட்டு மியான்மர் என அழைக்கப்படுகிறது.

மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் அனைவரையும் ராணுவம் கைது செய்து பாதுகாப்பில் வைத்துள்ளது. மியான்மரில் உள்ள மியாவாடி தொலைக்காட்சியி்ல் இன்று காலை ராணுவம் விடுத்த அறிவிப்பில், “ அடுத்த ஓர் ஆண்டுக்கு மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

மியான்மரின் ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக லீக் கட்சியின் செய்தித்தொடர்பாளர்  கூறுகையில் “ அரசின் ஆலோசகர் ஆன் சான் சூகி உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

அமெரிக்க  வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் ஜென் சகி கூறுகையில் “ பர்மா நாட்டின் ஜனநாயக விதிமுறைக்கு மாறாக ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி, ஆன் சான் சூகியை கைது செய்துள்ளது. மற்ற தலைவர்களையும் கைது செய்துள்ளது. பர்மாவில் ஜனநாயகம் மீண்டும் வருவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம். சட்டத்தின்படி, ஜனநாயக விதிமுறைகள் படி நடந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக ராணுவம் குற்றம்சாட்டி வந்தது. இதனால் ராணுவத்துக்கும், ஆளும் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவந்தது.

கடந்த 2015-ம் ஆண்டுவரை மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்துவந்தது. 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆன் சான் சூகியின் கட்சி அமோக வெற்றி ஆட்சியைப் பிடித்தது. ஆனால், ஆன் சான் சூகி வெளிநாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அந்நாட்டுச் சட்டப்படி பிரதமராக வர முடியாது என்பதால், ஆலோசகராக மட்டும் ஆன் சான் சூகி இருந்தார். 2-வது முறையாக கடந்த தேர்தலிலும் ஆன் சான் சூகி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

75 வயதாகும் ஆன் சான் சூகி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.