அல்-குவைதா தலைவர் பலி; சென்னை, அமெரிக்க தூதரகத்துக்கு, போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

ட்ரோன் தாக்குதலில் அல்-குவைதா தலைவர் பலியானதையடுத்து, சென்னை, அமெரிக்க துணை தூதரகத்துக்கு, போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில், ஆப்கானிஸ்தான், காபூலில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை, தேனாம்பேட்டை பகுதியில், அமெரிக்க துணை தூதரகம் உள்ளது. அமெரிக்க விசா பெறுவதற்கு, தினமும் அதிகம் பேர் வந்து செல்வார்கள்.

இதனால், எப்போதும், இங்கு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜெமினி மேம்பாலத்திலும் போலீசார் நிறுத்தப்பட்டு, கண்காணிப்பில் இருப்பர்.

அல்-குவைதா தலைவர் பலியானதை அடுத்து, சென்னை, அமெரிக்க துணை தூதரகத்துக்கு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு , நேற்று முதல் அளிக்கப்பட்டுள்ளது.

எப்போது, ஒரு வஜ்ரா வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும். தற்போது, கூடுதலாக மேலும் ஒரு வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில், 50 ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை, சில நாட்கள் தொடரும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.