விவசாயிளுக்கு ரூ.16.50 லட்சம் கோடி கடன்; தமிழகத்தில் கடற்பாசிப் பூங்கா: பட்ஜெட்டில் அறிவிப்பு

வரும் 2021-22ம் நிதியாண்டில் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.16.50 லட்சம் கோடி கடன்வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
  1. வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  2. நெல்லுக்கும், கோதுமைக்கும் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக, ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
  3. வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு.
  4. வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர்.  இ-நாம் திட்டத்தின் கீழ்  இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன.
  5. தமிழ்நாட்டில்  பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
  6. வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்தி விற்பனை மையங்கள் மூலமாக சிறப்பு கட்டமைப்பு நிதியம் மூலம் கடன் வசதி
  7. தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனைக் காக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  8. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு   ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை  திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும்.
  9. வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டம்.
  10. ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன   கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகம்
  11. வருவாயைப் பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.