ஆடியோ விவகாரம்.. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார் சசிகலா… கே.பி. முனுசாமி குற்றச்சாட்டு

கே.பி.முனுசாமி

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா நினைக்கிறார் என்று அந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சசிகலா அதிமுக தொண்டர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த ஆடியோவில், ஒன்னும் கவலைப்படாதீங்க. ண்டிப்பா கட்சியை சரி பண்ணிறலாம். எல்லோரும் தைரியமாக இருங்க… இந்த கொரோனா முடிஞ்சதும் நான் வந்திருவேன். கவலைப்படாதீங்க. கொரோனா நேரம், எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்க, நிலைமை மோசமாக இருக்கு. நிச்சயம் வந்திருவேன் என்று சசிகலா பேசியுள்ளார்.

சசிகலா

அந்த ஆடியோவில் சசிகலாவுடன் பேசியவர் அதிமுக ஐடி விங்க் துணை அமைப்பாளர் வினோத் என்று தகவல் வெளியானது. கடந்த சில தினங்களாக இந்த ஆடியோ அதிமுகவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி வேப்பனஹள்ளியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா ஆடியோ விவகாரம் தொடர்பாக கூறியதாவது: ஒரு அதிமுக தொண்டர் கூட சசிகலாவிடம் பேசவில்லை. அதிமுக நபர்களிடம் சசிகலா தான் பேசி வருகிறார்.

வினோத்

சசிகலாவிடம் பேசியதாக சொல்லப்படும் நபர்கள் அமமுகவை சேர்ந்தவர்கள். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார் சசிகலா. அவரின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை. சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக நபர்கள் யாரும் செவி சாய்க்க போவதில்லை. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து விலகி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.