கேரளாவில் நுழைந்த அதானி குழுமம்: திருவனந்தபுரம் விமானநிலைய நிர்வாகத்தை கையில் எடுத்தது

கேரள தலைநகர் திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையத்தின் செயலாக்கம், நிர்வாகம், பராமரிப்பு, மேம்பாட்டு ஆகியவற்றின் பணிகளை அதானி குழுமம் முறைப்படி கையில் எடுத்து கவனிக்கக் தொடங்கியுள்ளளது.


இந்தியா முழுவதும் 6 முக்கிய நகரங்களான லக்னோ, ஆமதாபாத், மங்களூரு, ஜெய்பூர், குவாஹாட்டி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களின் பராமரிப்பை தனியாருக்கு குத்தகைக்கு விடும் முடிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சரவை எடுத்தது.


இதன்படி, பொதுத்துறை, தனியார் கூட்டு அடிப்படையில் திருவனந்தபுரம் விமான நிலைய பராமரிப்பு குத்தகையை அதானி குழுமத்துக்கு 50 ஆண்டுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.


திருவனந்தபுரம் விமானநிலைய பராமரிப்பை அதானி குழுமத்துக்கு வழங்கியதற்கு கேரள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றம் சென்றது.


கேரள அரசு நிறுவனமான கேரளா மாநில தொழிற்துறை வளர்ச்சிக் கழகம் அந்த விமான நிலையத்தை குத்தைக்கு எடுக்க முயன்றது. ஆனால், அதானி குழுமம் குறிப்பிட்ட கேட்ட ஏல தொகைக்கு குறைவாக இருந்ததது எனக் கூறி மாநில அரசு நிறுவனத்துக்கு குத்தகை நிராகரிக்கப்பட்டு அதானி குழும நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக மத்திய அரசு மீது கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) குற்றம்சாட்டியது.

திருவனந்தபுரம் விமானநிலையத்தை அதானி குழுமத்துக்குகுத்தகைக்கு வழங்கிடக் கூடாது எனக் கூறி சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தீ்ர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.


இந்நிலையில் திருவனந்தபுரம் விமானநிலையத்தின் நிர்வாகத்தை முறைப்படி அதானி குழுமம் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “உங்களுக்கு சேவை செய்வதில் பெருமை கொள்கிறோம்.

கடவுளின் சொந்த தேசத்துக்கு வரும் பயணிகளை வரவேற்கிறோம். வாழ்க்கையை இணைக்கும் மகிழ்ச்சியான பயண அனுபவங்களுடன் வரும் உங்களுக்கு திருவனந்தபுரம் விமானநிலையம் நல்ல விஷயங்களுக்கான நுழைவாயிலாக இருப்பதை பகிர்ந்து கொள்கிறோம்.

பசுமையான இடங்கள், அழகான கடற்கரை, உயர்தர உணவகம் ஆகியவை கொண்ட கடவுளின் சொந்த தேசத்துக்குவரும் பயணிகளை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
இந்த ட்விட்டை மலையாளம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பதிவி்ட்டுள்ளது அதானி குழுமம்.

You may have missed