அதானி குழும பங்குகள் சரிவு! கடன் கொடுத்த எஸ்பிஐ வங்கி என்ன சொல்கிறது தெரியுமா?

அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு கடந்த 2 நாட்களாக கடுமையாகச் சரிந்துள்ள நிலையில் அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் நிலை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த புதன்கிழமை அதானி குழுமம் கடந்த 10 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், தில்லுமுல்லு, பொய்கணக்கு, பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தியது உள்ளிட்டவற்றை வெளிச்சம்போட்டு காட்டி அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கை வெளியானதில் இருந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் ஆட்டம் கண்டன. 2 நாட்களில் அதானி குழுமப் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் சரிந்தது, ஏறக்குறைய அதானி குழுமத்துக்கு ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதானி குழுமத்துக்கு இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளும் போட்டிபோட்டுக்கொண்டு கடன் வழங்கியுள்ளன.
அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்த வங்கிகளில் சமானிய மக்கள், நடுத்தர மக்கள் என பலரும் தங்களின் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை சேமித்துள்ளனர்.
ஆனால், வங்கிகள், அதானி குழுமத்துக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்தநிலையில் அதானி குழுமப் பங்குகள் சரிந்ததால் ஆயிரக்கணக்கான கோடிகளில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் வங்கிகளில் சேமித்துள்ள வாடிக்கையாளர்கள் பணம் என்னவாகும், மக்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கெனவே எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்தின் 5 நிறுவனங்களில் ஏராளமாக முதலீடு செய்துள்ளது. கடந்த 2 நாட்களில் அதானி குழும பங்குகளுக்கு ஏற்பட்ட சரிவால் ரூ.16,580 கோடி இழப்பு எல்ஐசிக்கு ஏற்பட்டுள்ளது.
அதானி குழுமத்தில் உள்ள 5 நிறுவனங்களின் ஒட்டுமொத்த கடன் ரூ.2.10 லட்சம் கோடியாகும். இதில் 40 சதவீதம் அதாவது ரூ.81,324 கோடியே இந்தியாவில் உள்ள பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் கடனாக வழங்கியுள்ளன.
இதில் அதானி குழுமத்துக்கு அதிகபட்சமாக கடன் வழங்கியதில் முதலிடத்தில் இருப்பது பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவாகும்.
எஸ்பிஐ வங்கியின் கார்ப்பரேட் பேங்க் பிரிவு மேலான் இயக்குநர் ஜே சுவாமிநாதன் சிஎன்பிசி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “வங்கிக் கொள்கையின்படி, தனிப்பட்ட வாடிக்கையாளர்களைப் பற்றி நாங்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை.
அதானி குழுமத்துடனான எஸ்பிஐ- வழங்கிய கடன் என்பது ரிசர்வ் வங்கி வகுத்த விதிகளுக்கு உட்பட்டுத்தான் இருக்கிறது. அதாவது வங்கியின் கிடைக்கும் மூலதனத்தில் 25 சதவீதத்துக்கு மேல் ஒருநிறுவனத்துக்கு கடன் வழங்கக்கூடாது என்ற விதி இருக்கிறது அதை பின்பற்றுகிறோம்.
அது மட்டுமல்லாமல் அதானி குழுமத்தில் சொத்துக்களை விரைவாக பணமாக்கும் பிரிவுகளில்தான் கடன் வழங்கப்பட்டுள்ளன.
எனவே கடன் சேவை ஒரு சவாலாக இருக்காது. ஆதலால் எஸ்பிஐ வங்கியில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா தரப்பில் கூறுகையில் “அதானி குழுமத்தின் பங்குகள் சரிவால் எங்களுக்கு பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக நினைக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் கடன் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.