ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் இணைந்த நடிகை ஊர்மிளா, எழுத்தாளர் பெருமாள் முருகன்

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் நடிகையும், அரசியல் கட்சித் தலைவருமான ஊர்மிளா மடோன்கர் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோர் இன்று இணைந்தனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கினார். இதுவரை 115 நாட்களுக்கும் மேலாக நடந்து, 3ஆயிரம் கி.மீ தொலைவுக்கும் அதிகமாக ராகுல் காந்தி கடந்துள்ளார்.

இதுவரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம் மாநிலங்களைக் கடந்து ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்துள்ளார்.

இந்நிலையில், ஜம்முவில் உள்ள நக்ரோட்டாவில் இருந்து இன்று காலை ராகுல் காந்தி தனது நடைபயணத்தைத் தொடங்கினார். அப்போது, அவருடன் கடந்த 1990களில் புகழ்பெற்ற நடிகையான ஊர்மிளா மடோன்கரும் இணைந்து நடந்தார்.

நக்ரோட்டாவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகே இன்று காலை 8மணிக்கு ராகுல் காந்தி நடைபயணம், மிகுந்த பாதுகாப்புடன் தொடங்கியது. ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் சூழ, சாலையின் இரு பகுதிகளிலும் ராகுல் காந்தியை வரவேற்று மக்கள் நின்றிருந்தனர்.

கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை ஊர்மிளா தேர்தல் தோல்விக்குப்பின் விலகி, 2020ம் ஆண்டு சிவசேனா கட்சியில் சேர்ந்தார்.

ராகுல் காந்தியுடன் இணைந்து நடந்த ஊர்மிளா, கிரீம் நிறத்தில் காஷ்மீரின் பாரம்பரிய கவுன், தொப்பி ஆகியவற்றை அணிந்திருந்தார்.

எழுத்தாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான பெருமாள் முருகன், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விகார் ரசூர் வானி, முன்னாள் அமைச்சர் தாரிக் கரா ஆகியோரும் நடைபயணத்தில் இணைந்தனர்.

இந்த நடைபயணம் இன்று ரம்பன் பகுதியில் நிறுத்தப்பட்டு நாளை மீண்டும் தொடங்கி,வரும் 30ம் தேதி ஸ்ரீநகர் கிரிக்கெட் அரங்கை சென்று நிறைவடையும். காஷ்மீர் பண்டிட் இனப் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து கையில் பூக்களுடன் ராகுல் காந்தியை வரேவற்றனர்.