மற்றொரு வழக்கில் கைது,எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்; மீரா மிதுனுக்கு மீண்டும் சிறை

மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைத்தனர்.

சென்னை, வியாசர்பாடி, எம்.கே.பி நகரை சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு நடிகை மீரா மிதுன் மீது புகார் கொடுத்தார். அதில் சமூக வலைத்தளங்களில், நடிகை மீரா மிதுன், தனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பி வருவதாக கூறி நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார். அதன் பேரில் அவதூறு பரப்புதல், சமூக வலைத்தளங்களில் தவறாக பயன்படுத்துதல் என்பது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், பட்டியலினத்தோர் குறித்து இழிவாக பேசி, சமூக வலைத்தளங்களில் வீடியோவை வைரலாக்கிய நடிகை மீரா மிதுனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுனை எம்.கே.பி நகர் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ள எழும்பூர் நீதிமன்றத்தில் வாரண்ட் பெற்றனர். அதில் மீரா மிதுன் கைது செய்யப்பட்டார்.

மேலும், இரண்டு நாள் காவலில் எடுக்கவும் மனு தாக்கல் செய்திருந்தனர். சிறையில் இருந்த மீரா மிதுனை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். காவலில் எடுத்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் மாஜிஸ்திரேட் லட்சுமி தீர்ப்பினை ஒத்தி வைத்தார். இதையடுத்து, புதிய வழக்கில் கைதான மீரா மிதுன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

You may have missed