உயிருக்கு அச்சுறுத்தல்: நடிகர் சூர்யா வீட்டுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டன.

நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற  புகார் எழுந்தது.

மேலும் அந்த திரைப்படத்துக்கு வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் சூர்யா, எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவுக்கும், தனக்கும் இல்லை என்று  தெரிவித்தார்.

இருப்பினும் அப்போது பாதுகாப்பு கருதி நடிகர் சூர்யா வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
 இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்த, “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் மார்ச் 10ம் தேதி வெளியாகிறது.

இதற்கிடையே இந்த திரைப்படத்தை கடலூரில் வெளியிட தடைவிதிக்க கோரி பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சூர்யா, ஜெய் பீம் திரைப்பட விவகாரத்தில் வன்னிய சமூக மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்காதவரை படத்தை திரையிடக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிடக் கூடாது சில இடங்களில் திரையரங்க உரிமையாளர்கள் மிரட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இதனால் சூர்யாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கருதினர். இதையடுத்து சூர்யா வசிக்கும் சென்னை தியாகராயநகர் ஆற்காடு சாலையில் உள்ள வீட்டுக்கு மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இன்று வழங்கப்பட்டது.